
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டம் நடந்து முடிந்திருக்கிறது. சென்னை அணி இந்த போட்டியை 11 ரன்கள் வித்தியாசத்தில் நெருக்கமாக வந்து தோற்றிருக்கிறது. சேஸிங்கின் போது கடைசிக்கட்ட ஓவர்களில் தோனி, ஜடேஜா ஆகியோர் வெற்றிகரமாக ஆட்டத்தை ஃபினிஷ் செய்து கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அது நடக்கவில்லை. ஆனால், சென்னையின் தோல்விக்கு இந்த பேட்டிங் சொதப்பல்களை விட ஃபீல்டிங்கில் சென்னை கோட்டைவிட்டதுதான் மிக முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. எப்படி?
போட்டி நடைபெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் முதலில் பேட் செய்யும் அணிகளின் ஆவரேஜ் ஸ்கோர் 169 மட்டும்தான். ஆனால், நேற்று பஞ்சாப் 187 ரன்களை எடுத்திருந்தது. சராசரியை விட 18 ரன்கள் அதிகம். ஆக, ஜடேஜா சொன்னதைபோல தோல்விக்குக் காரணமான அதிகமாக வழங்கப்பட்ட அந்த 10-15 ரன்களுக்கு சொதப்பலான ஃபீல்டிங்குமே ஒரு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக, கேட்ச் ட்ராப்கள். அந்த கேட்ச் ட்ராப்களால்தான் இந்த மேட்ச்சே ட்ராப் ஆனது.
பஞ்சாப் கிங்ஸ் எடுத்த 187 ரன்களில் பெரும்பாலான ரன்களை தவான்-பணுகா ராஜபக்சே கூட்டணிதான் எடுத்திருந்தது. இருவரும் இணைந்து 110 ரன்களை எடுத்திருந்தனர். இப்படி ஒரு பார்ட்னர்ஷிப் பஞ்சாபுக்கு இந்த சீசனில் இதுவரை அமைந்ததே இல்லை. முதல் முறையாக 100 ரன்களுக்கு மேல் ஒரு பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கிறார்கள்.