
இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இதன் மூலம் இலங்கை அணியானது கடந்த 1997ஆண்டுக்கு (27 ஆண்டுகளுக்கு)பிறகு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.
அதன்படி இப்போடியில் டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியில் அவிஷ்கா ஃபெர்னாண்டோ 98 ரன்களையும், குசால் மெண்டிஸ் 59 ரன்களையும் குவித்தததன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அறிமுக வீரராக களமிறங்கிய ரியான் பராக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி பேட்டர்கள் சோபிக்க தவறினர்.
இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா 35 ரன்களையும், வாஷிங்டன் சுந்தர் 30 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டியதால் 138 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய துனித் வெல்லாலகே 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் அவிஷ்கா ஃபெர்னாண்டோ ஆட்டநாயகன் விருதையும், துனித் வெல்லாலகே தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.