
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளைப் பதிவுசெய்து 2-2 என்ற கணக்கில் தொடரை சமன்செய்தன. இதையடுத்து நடைபெற்றுவரும் ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்துள்ளன.
இந்நிலையில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான் 3ஆவது ஒருநாள் போட்டி லண்டனில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. இதில் ஜானி பேர்ஸ்டோவ் ரன்கள் ஏதுமின்றியும், ஜோ ரூட் 4 ரன்களிலும் என டிரண்ட் போல்ட் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் இணைந்த டேவிட் மாலன் - பென் ஸ்டோக்ஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியதுடன், இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டேவிட் மாலன் 12 பவுண்டரி, ஒரு சிக்சர் என 96 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். ஆதேசமயம் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் ஸ்டோக்ஸ் 76 பந்துகளில் தனது 4ஆவது சர்வதேச ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.