
உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வினை அறிவித்துள்ளார். பென் ஸ்டோக்ஸ் சமீபத்தில்தான் இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றார். அதற்குமுன் இங்கிலாந்து டெஸ்ட் அணி, கத்துக்குட்டி அணியைப் போல படுமோசமாக சொதப்பி வந்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் கேப்டன்ஸியில் மிரட்டலாக விளையாடி, எவ்வளவு பெரிய இலக்கையும் அசால்ட்டாக துரத்தி வெற்றியைப் பெற்றது.
சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்ற பென் ஸ்டோக்ஸ், சிறப்பாக செயல்படவில்லை. பட்லர் தலைமையில் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் படுமோசமாக சொதப்பினார். இந்நிலையில்தான், ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக திடீரென்று அறிவித்துள்ளார்.
பென் ஸ்டோக்ஸ் ஓய்வை அறிவித்தப் பிறகு இதற்கான காரணத்தையும் விளக்கினார். அதில், ‘‘இது மிகவும் கடினமான முடிவுதான். என்னால் இந்த வடிவ கிரிக்கெட்டில் 100% பங்களிப்பை வழங்க முடியவில்லை. இதற்குமேலும் கொடுக்க முடியாது என நினைக்கிறேன். இதுதான் ஓய்வுக்கு முக்கிய காரணம்’’ எனக் கூறியுள்ளார்.