
ஆரம்ப காலத்தில் டெஸ்ட் போட்டிகளாக மட்டும் விளையாடப்பட்டு வந்த கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக 50 ஓவர்களை கொண்ட ஒருநாள் போட்டிகளாகவும் 20 போட்டிகளாகவும் பரிணாம வளர்ச்சியை கண்டுள்ளது. இதை வளர்ச்சி என்று கூறுவதை விட வீழ்ச்சி என்று தான் கூற வேண்டும். ஏனெனில் 20 ஓவர் போட்டிகளில் வருகையால் அதுவரை விளையாடப்பட்டு வந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மவுசு குறைந்தது.
போதாகுறைக்கு ஐபிஎல் போன்ற டி20 தொடர்கள் உலகம் முழுவதிலும் வந்ததால் தற்போது ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டுக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது. காரணம் அந்த டி20 தொடர்களில் மெஷின்களை போல் பங்கேற்றுவிட்டு விட்டு நாட்டுக்காக 3 வகையான கிரிக்கெட்டிலும் திறம்பட விளையாடுவது வீரர்களுக்கு சவாலாக மாறியுள்ளது.
அதனால் பணிச்சுமையால் பாதிக்கப்படும் வீரர்கள் பணத்திற்காக டி20 கிரிக்கெட் தங்களது தரத்தை நிரூபிக்க டெஸ்ட் கிரிக்கெட் என்ற வகையில் தேர்வு செய்து விளையாடுவதால் அந்த இரண்டுக்கும் இடையில் நிற்கும் ஒருநாள் கிரிக்கெட்டை விரும்புவதில்லை. மேலும் 5 நாட்களில் எப்போது வேண்டுமானாலும் முடிவு மாறலாம் என்ற வகையில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளையும் ஓவருக்கு ஓவர் அனல் பறக்கும் டி20 போட்டிகளையும் விரும்பும் இப்போதைய ரசிகர்கள் இரண்டுக்கும் நடுவே எதிர்பார்த்த முடிவுகளை கொடுக்கும் ஒருநாள் போட்டிகளை விரும்புவதில்லை.