
இந்தியாவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியதின் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராகத் தனது முதல் வெற்றியைப் பெற்றது பாகிஸ்தான். இதுவரை டி20, ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவிடம் 13 முறை பாகிஸ்தான் அணி தோல்வி கண்டிருந்தது.
இந்த முறையும் தோல்வி காணும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் கேப்டன் பாபா்-ரிஸ்வான் இணையின் அதிரடி ஆட்டத்தால் வரலாற்றை மாற்றியது பாகிஸ்தான். துபை சா்வதேச மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 151/7 ரன்களை எடுத்தது. இரண்டாவதாக விளையாடிய பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 17.5 ஓவர்களில் 152 ரன்களைக் குவித்து அபார வெற்றி கண்டது.
இந்திய அணியின் மோசமான தோல்விக்கு வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியே முக்கியக் காரணம் எனச் சமூகவலைத்தளங்களில் அவரை இழிவுபடுத்தி பதிவுகள் எழுதப்பட்டுள்ளன. நேற்றைய ஆட்டத்தில் 3.5 ஓவர்கள் வீசி 43 ரன்கள் கொடுத்தார் ஷமி. இந்தியப் பந்துவீச்சாளர்களில் அதிக ரன்களை கொடுத்தவர் அவர்தான்.