
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் பாபர் அசாம் அதிரடியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று அசத்தியது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று ஜஹனெஸ்பர்க்கில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்து விளையாடியது.
அதன்படி களமிறங்கிய தென்ஆப்பிரிக்க அணிக்கு குயின்டன் டி காக், மார்க்ரம் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். அதில் 39 ரன்கள் எடுத்திருந்த மார்க்ரம் அஷ்ரஃப் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் ஜோடி சேர்ந்த டி காக் - டெம்பா பவுமா இணை சிறப்பாக விளையாடி, அரைசதம் கடந்ததோடு அணியின் ஸ்கோரை உயர்த்தவும் உதவினர்.