சிராஜுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ரசிகர்கள்!
முகமது சிராஜை சில ரசிகர்கள் தரைகுறைவாக விமர்சித்ததை அடுத்து இதர ரசிகர்கள் ஒரு கிரிக்கெட் வீரர் போட்டிகளில் சுமாராக செயல்படுவது சகஜமானது. ஆனால் அதற்காக இப்படி எல்லைமீறி திட்டுவதாக என்று அந்த ரசிகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
ஐபிஎல் 2022 தொடரில் கோப்பையை வெல்ல வேண்டுமென்ற கனவுடன் அதுவும் தென் ஆப்பிரிக்கா போன்ற சர்வதேச அணியை வழிநடத்திய அனுபவம் கொண்ட கேப்டன் டுப்லஸ்ஸிஸ் தலைமையில் புத்துணர்ச்சியுடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இந்த வருடமும் சுமாராக செயல்பட்டு நாக்-அவுட் சுற்றுடன் வெளியேறியது.
ஒவ்வொரு வருடமும் ஏதேனும் முக்கிய தருணங்களில் சுமாராக செயல்பட்டு வெளியேறும் அந்த அணி இம்முறை மும்பையின் உதவியால் பிளே-ஆப் சுற்றுக்கு 4-வது அணியாக தகுதி பெற்றது. அதன்பின் எலிமினேட்டர் போட்டியில் ரஜத் படிதார் 114* ரன்கள் அதிரடியில் லக்னோவை சாய்த்த அந்த அணி குவாலிபயர் 2 போட்டிக்கு தகுதி பெற்றது.
Trending
ஆனால் ராஜஸ்தானுக்கு எதிராக நடந்த குவாலிபயர் 2 போட்டியில் மீண்டும் அதே ரஜத் படிதார் 58 (42) ரன்கள் எடுத்த அதிரடியில் முதல் 13 ஓவர்களில் 107/2 என்ற நல்ல நிலைமையில் இருந்த பெங்களூரு கடைசி 7 ஓவர்களில் சொதப்பி 50/6 ரன்களை ரன்களை மட்டுமே எடுத்தது. அதனால் 158 என்ற எளிய இலக்கை துரத்திய ராஜஸ்தானுக்கு ஜோஸ் பட்லர் அதிரடியாக 106* (60) ரன்கள் குவித்து தோல்வி பரிசளித்து வரலாற்றில் 15ஆஆவது முறையாக பெங்களூருவை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
இந்த வருடம் அந்த அணியின் பேட்டிங்கில் விராட் கோலி போன்ற நட்சத்திரங்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறியது தோல்விக்கான காரணமாக அமைந்தது. அதேபோல் பந்து வீச்சில் குறிப்பாக வேகப்பந்து வீச்சில் ஹர்ஷல் படேல் மற்றும் ஜோஸ் ஹெசல்வுட் ஆகியோர் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் 7 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ரன்களை வாரி வழங்கும் வள்ளலாக செயல்பட்டு பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார். குறிப்பாக ராஜஸ்தானுக்கு எதிரான குவாலிபயர் 2 போட்டியில் வெறும் 2 ஓவர்களில் 32 ரன்களை வழங்கியதால் எஞ்சிய 2 ஓவர்களை அவரிடம் கேப்டன் டுப்லஸ்ஸிஸ் வழங்கவில்லை.
கடந்த 2017 முதல் 9.21, 8.95, 9.55, 8.68 என மோசமான எக்கனாமியில் பந்து வீசி வந்த அவர் அப்போதைய கேப்டன் விராட் கோலியின் தொடர்ச்சியான ஆதரவால் ஒரு வழியாக கடந்த 2021இல் 15 போட்டிகளில் 11 விக்கெட்டுகளுடன் வெறும் 6.78 என்ற அற்புதமான எக்கனாமியில் பந்து வீசி அசத்தினார். அதன் காரணமாக இந்தியாவுக்காக நிறைய விளையாடும் வாய்ப்பையும் பெற்ற அவர் மீண்டும் இந்த வருடம் வரலாற்றில் உச்சபட்சமாக 15 போட்டிகளில் 9 விக்கெட்டுக்களுடன் 10.08 என்ற மோசமான எக்கனாமியில் பந்து வீசியுள்ளார்.
இதன் காரணமாக கோபமடைந்த பெங்களூர் ரசிகர்கள் அன்றைய போட்டியின் முடிவில் முகமது சிராஜ் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரை சரமாரியாக திட்டி தீர்த்தார்கள். இந்தியாவுக்காக விளையாடுபவர் என்பதையும் மறந்த அவர்கள் கெட்ட கெட்ட வார்த்தைகளால் படு மோசமாக திட்டினார்கள்.
அதிலும் குறிப்பாக சமீபத்தில் மறைந்த அவரின் தந்தை ஒரு ஆட்டோ ஓட்டுநர் என்பதால் “பேசாமல் நீயும் ஆட்டோ ஓட்டுவதற்கு செல்” என்பது போல் எல்லை மீறி திட்டினார்கள். இதனால் அதிர்ந்த இதர ரசிகர்கள் ஒரு கிரிக்கெட் வீரர் போட்டிகளில் சுமாராக செயல்படுவது சகஜமானது. ஆனால் அதற்காக இப்படி எல்லைமீறி திட்டுவதாக என்று அந்த ரசிகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
மேலும் ஆர்சிபி ரசிகர்கள் இப்படி மரியாதை கொடுக்காத காரணத்தினாலேயே பெங்களூர் அணி இதுநாள் வரை கோப்பையை வெல்ல முடியவில்லை என்று பதிலடி கொடுக்கும் இதர ரசிகர்கள் “இதுவும் கடந்து போகும் நீங்கள் வருங்காலங்களில் நிச்சயம் நன்றாக பந்துவீசுவீர்கள்” என்று சிராஜ்க்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
Win Big, Make Your Cricket Tales Now