
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவராக ரவிச்சந்திரன் அஸ்வின் திகழ்ந்து வருகிறார். இடையில் 4 வருடங்கள் அவருக்கான வாய்ப்புகள் குறைந்திருந்தாலும், தற்போது டி20 உலகக்கோப்பை தொடர் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார்.
இந்திய அணியில் அஸ்வின் - ஜடேஜா ஆகியோரின் இடங்களை குல்தீப் யாதவ் - யுவேந்திர சாஹல் ஜோடி தான் பிடித்தது. ஆனால் அவர்களால் நீண்ட காலம் இடம்பிடிக்க முடியவில்லை. எனவே அந்த இடங்களுக்கு மீண்டும் ஜடேஜா நுழைந்துவிட்ட போதும், அஸ்வினால் வர முடியவில்லை. திறமை இருந்தும், வேண்டுமென்றே அவரை புறக்கணித்ததாக கோலி - ரவிசாஸ்திரி மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
இந்நிலையில் ரவிசாஸ்திரியுடன் நடந்த மனக்கசப்பு குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் வெளிப்படையாக பேசியுள்ளார். 2019ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடியது. சிட்னியில் நடந்த ஒரு டெஸ்டில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அவரை பாராட்டி பேசிய ரவிசாஸ்திரி அஸ்வினை மட்டம் தட்டினார்.