
ரமேஷ் தமிழ்மணி என்பவர் எழுதும் கிராஃபிக் நாவல் ‘அதர்வா: தி ஒரிஜின்’. விர்ஸு ஸ்டூடியோஸ் மற்றும் மிடாஸ் டீல்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த கிராஃபிக் நாவலின் நாயகனான அதர்வா என்ற சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்துக்கு கிரிகெட் வீரரான எம்.எஸ்.தோனியின் தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த கிராஃபிக் நாவலுக்கான மோஷன் போஸ்டரை இன்று தோனி தனது அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’, ‘பாகுபலி’ போன்ற வரலாற்றுக் கதையை பின்னணியாக கொண்ட இந்த கிராஃபிக் நாவலில் தோனியின் தோற்றம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நாவலுக்காக 150 ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
இந்த நாவல் குறித்து தோனி கூறுகையில்,“இந்த நாவலில் இணைந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். ‘அதர்வா: தி ஒரிஜின்’ ஆர்வத்தை தூண்டக் கூடிய விறுவிறுப்பான கதைக்களத்தையும், அட்டகாசமான ஓவியங்களை கொண்ட ஒரு கிராஃபிக் நாவல். இந்தியாவின் முதல் புராண சூப்பர் ஹீரோவை அறிமுகப்படுத்தும் எழுத்தாளர் ரமேஷ் தமிழ்மணியின் முயற்சி ஒவ்வொரு வாசகரையும் மென்மேலும் படிக்கத் தூண்டும்” என்று கூறியுள்ளார்.