
இந்திய அணியின் அனுபவ வீரரும், தமிழக கிரிக்கெட்டருமான 37 வயது நிரம்பிய தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்காக கடந்த 2004ஆம் ஆண்டு அறிமுகமாகி தற்போது வரை விளையாடி வருகிறார். இதுவரை இந்திய அணிக்காக பல போட்டிகளில் அவர் விளையாடியுள்ள அவர் தனக்கென ஒரு நிரந்தர இடம் இல்லாமல் உள்ளேயும், வெளியேயும் இருந்து வருகிறார்.
அதோடு 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் விளையாடிய தினேஷ் கார்த்திக் அதன் பின்னர் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தொடர்ந்து போராடி வந்தார்.
அதன்பின்னர் தற்போது 3 ஆண்டுகள் கழித்து நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. தனக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி உள்ள தினேஷ் கார்த்திக்-க்கு அடுத்ததாக அயர்லாந்துக்கு எதிராக நடைபெற உள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான அணியில் இடம் கிடைத்துள்ளது.