
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் டிசம்பர் 8இல் ஆரம்பித்து ஜனவரி 18 அன்று முடிவடைகிறது. இரு நாள்களுக்கு முன்பு டிம் பெயின் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது.
கடந்த 2018-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் 46ஆவது கேப்டனாக விக்கெட் கீப்பர் டிம் பெயின் நியமிக்கப்பட்டார். 2019 ஆஷஸ் தொடரில் கோப்பையைத் தக்கவைக்க உதவினார். இந்நிலையில் பாலியல் விவகாரம் தொடர்பான சர்ச்சையில் சிக்கிய காரணத்துக்காக கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார் டிம் பெயின்.
கடந்த 2017இல் டாஸ்மானியா கிரிக்கெட் அலுவலகத்தில் பணியாற்றிய பெண்ணுக்கு பாலியல் ரீதியான குறுஞ்செய்திகளை டிம் பெயின் அனுப்பியுள்ளார். இதுதொடர்பான செய்திகள் சமீபத்தில் வெளியாயின. இந்த விவகாரம் தொடர்பாக சில வருடங்களுக்கு முன்பு விசாரணை நடத்தியது கிரிக்கெட் ஆஸ்திரேலியா.