
இந்திய அணியின் இளம் அதிரடி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் இஷான் கிஷனை ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.15.5 கோடி என்ற பெரும் தொகைக்கு எடுத்தது. ஆனால் இஷான் கிஷன் ஐபிஎல்லில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஐபிஎல் 15வது சீசனில் 418 ரன்களை இஷான் கிஷன் அடித்திருந்தாலும், மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிகளுக்கு உதவுமளவிற்கான இன்னிங்ஸ்களை அவர் ஆடவில்லை.
ஆனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்காக அபாரமாக பேட்டிங் ஆடிவருகிறார் இஷான் கிஷன். ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் ஆகிய 2 சீனியர் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் இந்த தொடரில் ஆடாததால், இஷான் கிஷனுக்கு இந்திய அணிக்காக ஓபனிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.
அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட இஷான் கிஷன் முதல் டி20 போட்டியில் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து, 48 பந்தில் 76 ரன்களை குவித்தார். 2ஆவது போட்டியிலும் 21 பந்தில் 34 ரன்கள் அடித்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார்.