
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் கடந்த மார்ச் 26ஆம் தேதி மும்பையில் தொடங்கியது. 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று முழுவதும் மகாராஷ்டிராவில் உள்ள மும்பை வான்கடே மைதானம், பிரபோர்ன் மைதானம், டி.ஒய். பாட்டீல் மைதானம், புனே எம்சிஏ மைதானம் ஆகிய நான்கு இடங்களில் நடைபெற்றன.
லீக் சுற்று முடிவில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் தேர்வாகின. குவாலிஃபயர் 1, எலிமினேட்டர் போட்டிகள் கொல்கத்தாவின் ஈடன் கார்டனிலும், குவாலிஃபயர் 2, இறுதிப்போட்டி ஆகியவை அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்திலும் நடைபெற்றன.
நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப்போட்டியில், குஜராத் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி தனது அறிமுக தொடரிலேயே சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இந்த தொடர் முழுவதும் குஜராத் அணியின் ஒட்டுமொத்த வீரர்களும் சிறப்பாக விளையாடியதே கோப்பையை வெல்ல காரணமாக அமைந்தது.