
ஐபிஎல் 2022 சீசனில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 8 அணிகள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன. அதேநேரம் புதிதாக அகமதாபாத், லக்னோ என இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. பிப்ரவரி 12 மற்றும் 13-ஆம் தேதிகளில் பெங்களூரில் நடைபெறும் மெகா ஏலம் நடைபெறவுள்ளது.
இந்த ஏலத்தில் பங்கேற்பதற்கு முன்னதாக அகமதாபாத் அணி தனது பெயரை அறிவித்துள்ளது. அதன்படி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான அகமதாபாத் அணிக்கு 'குஜராத் டைட்டன்ஸ்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 'குஜராத் டைட்டன்ஸ்' பெயர் காரணம் குறித்து தெரிவித்துள்ள அணி நிர்வாகம், குஜராத் மாநிலத்தின் கிரிக்கெட் பாரம்பரியத்தை போற்றும்வகையில் இந்தப் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவரான சித்தார்த் படேல், "குஜராத்தின் பல ஆர்வமுள்ள ரசிகர்களுக்காக சிறந்த விஷயங்களைச் செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், அதனால்தான் நாங்கள் 'டைட்டன்ஸ்' என்ற பெயரைத் தேர்ந்தெடுத்துள்ளோம். வீரர்களின் மெகா ஏலம் நெருங்கிவருகிறது. புதிய சீசனுக்கு ஏற்ற வகையில் சரியான வீரர்களை தேர்ந்தெடுப்போம் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.