
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்றின் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் குஜராத் – ராஜஸ்தான் அணிகள் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் மோதுகின்றன. அறிமுக அணியான குஜராத் லீக் சுற்றில் 20 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்திருந்தது.
முதல் முறையாக கேப்டனாக ஹர்திக் பாண்டியா, பேட்டிங், பந்து வீச்சு என இரண்டிலும் சிறந்த பங்களிப்பை வழங்கி அணியை அற்புதமாக வழிநடத்தி வருகிறார். சுழலால் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கும் ரஷித் கான் பேட்டிங் கிலும் வலுசேர்ப்பவராக உருமாற் றம் கண்டுள்ளார். டேவிட் மில்லர், ராகுல் திவேத்தியா ஆகியோரது அதிரடியும் பலம் சேர்ப்பதாக உள்ளது. எனினும் டாப் ஆர்டரில் ஷுப்மன் கில்லின் ஃபார்ம் சற்று கவலை அளிப்பதாக உள்ளது.
அதேவேளையில் ரித்திமான் சாஹா, கடந்த சில ஆட்டங்களில் நம்பிக்கை அளிக்கும் விதமாக செயல்பட்டு வருகிறார். வேகப்பந்து வீச்சில் பவர் இந்த சீசனில் அதிக 11 விக்கெட்கள் வீழ்த்தியுள்ள மொகமது ஷமியுடன் அல்ஸாரி ஜோசப், லாக்கி பெர்குசன் கூட்டணி எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுக்க ஆயத்தமாக உள்ளனர்.