
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 21-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் கேப்டன் கேன் வில்லியம்ஸன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி, பேட்டிங் இறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 162 ரன்களை சேர்த்தது. அந்த அணி தரப்பில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக ஆடி 50 ரன்களை குவித்தார்.
163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணியில் இந்த முறையும் சிறப்பான தொடக்கம் கிடைத்தது. ஓப்பனிங் ஜோடி அபிஷேக் சர்மா 32 பந்துகளில் 42 ரன்களும், கேப்டன் வில்லியம்சன் 46 பந்துகளில் 57 ரன்களையும் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 129 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து பலமான நிலையில் இருந்தது.
இதன் பின்னர் வந்த நிக்கோலஸ் பூரண் அதிரடி காட்டினார். 18 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 34 ரன்களை விளாசினார். இதனால் 19.1 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 168 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த தொடரில் பெறும் முதல் தோல்வி இதுவாகும்.