
இந்தியாவில் 15ஆவது ஐபிஎல் சீசனானது வரும் 26ஆம் தேதி துவங்கி மே மாதம் 29 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த சீசனுக்கான தொடரில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் புதிதாக லக்னோ மற்றும் குஜராத் ஆகிய நகரங்களை தலைமையாகக் கொண்டு இரண்டு அணிகள் உருவாக்கப்பட்டன. அதுமட்டுமின்றி மெகா ஏலத்திலும் கலந்து கொண்ட இந்த இரு புதிய அணிகளும் தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்தது.
அதன்படி லக்னோ அணியின் கேப்டனாக கேஎல் ராகுலும், குஜராத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் ஹர்டிக் பண்டியா மும்பை அணிக்காக தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். ஆல்-ரவுண்டராக ஜொலித்த ஹர்திக் பாண்டியா கடந்த சில ஆண்டுகளாகவே பந்து வீசாமல் விளையாடி வருவதால் அவரை மும்பை அணி தங்களது அணியில் இருந்து விடுவித்தது.
இதன் காரணமாக பாண்டியா மெகா ஏலத்திற்கு செல்ல இருந்தார். ஆனால் அதற்கு முன்பாகவே குஜராத் டைட்டன்ஸ் அணி அவரை பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுத்து தங்கள் அணிக்கு கேப்டனாக நியமித்தது. அதோடு அந்த அணியில் நேரடியாகத் தக்கவைக்கப்பட்ட மூன்று வீரர்களாக பாண்டியாவுடன் சேர்ந்து ரஷீத் கான் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தக்க வைக்கப்பட்டனர்.