டி20 உலகக்கோப்பை: ஹிட் விக்கெட்டாகி பெவிலியன் திரும்பிய ஹர்திக் - காணொளி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்துள்ளது.
டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் மோதி வருகின்றன. ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு வழக்கம் போல் கே.எல் ராகுல் (5) விரைவாக விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றம் கொடுத்தார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய மற்றொரு துவக்க வீரரான ரோஹித் சர்மா 28 பந்துகளில் 27 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார்.
Trending
இதன்பின் களத்திற்கு வந்த மிரட்டல் நாயகனான சூர்யகுமார் யாதவ் 10 பந்துகளில் 14 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து கூட்டணி சேர்ந்த விராட் கோலி – ஹர்திக் பாண்டியா ஜோடி போட்டியின் தன்மையை உணர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
கடந்த போட்டிகளை போல் இந்த போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 40 பந்துகளில் 50 ரன்கள் எடுத்திருந்த போது ஒரு சிறிய தவறால் விக்கெட்டை இழந்தார். விராட் கோலி விக்கெட்டை இழந்தபிறகு, தரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்டியா 29 பந்துகளில் அரைசதம் கடந்ததுடன், கடைசி இரண்டு ஓவரில் அணியின் தேவைக்கு ஏற்ப அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 33 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி 168 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக கிரிஸ் ஜோர்டன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கிரிஸ் வோக்ஸ் மற்றும் அடில் ரசீத் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். இப்போட்டியின் கடைசி பந்தில் ஹர்திக் பாண்டியா பவுண்டரி அடிக்க முற்பட்டு ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். தற்போது இக்காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now