
ஐபிஎல் 15ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், சாம்பியன் அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் படுமோசமாக சொதப்பி, புள்ளிப் பட்டியலின் கடைசி இரண்டு இடங்களில் நீடித்து வருகிறது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக புதிய அணிகளான லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ், குஜராத் டைடன்ஸ் அணிகள் அபாரமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைடன்ஸ் அணி 7 போட்டிகளில் ஒரேயொரு தோல்வியை மட்டும் சந்தித்து 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடித்து வருகிறது.
குஜராத் அணி இப்படி அதிரடி காட்ட முக்கிய காரணம், அணிக் கேப்டன் ஹர்திக் பாண்டியா தான். டாப் ஆர்டரில் களமிறங்கி பேட்டிங்களில் தொடர்ந்து ரன்களை குவித்து வருகிறார். அதேபோல், பந்துவீச்சிலும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு, தொடர்ச்சியாக 137+ வேகத்தில் பந்துவீசி வருகிறார். பீல்டிங்கிலும் அபாரம்தான்.
இந்நிலையில், ஹர்திக் பாண்டியாவுக்கு திடீரென்று காயம் ஏற்பட்டுள்ளது. அவ்வபோது கைகளை பிடித்துக்கொண்டுதான் களத்தில் நிற்கின்றார். இப்படி காயத்தை எதிர்கொண்டு வருவதால் 29ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக இவர் களமிறங்கவே இல்லை. இதனைத் தொடர்ந்து கடைசியாக நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக பேட்டிங் மட்டுமே செய்தார். பந்துவீசவில்லை. அதுமட்டுமல்ல பீல்டிங் செய்தபோது கூட மூச்சு வாங்கிக்கொண்டேதான் நின்றிருந்தார்.