
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனியின் தலைமையில் இந்திய அணி எப்பேர்பட்ட வளர்ச்சி அடைந்தது என்பதை நாம் கண்கூடாக கண்டுள்ளோம். அவரது தலைமையின் கீழ் இந்திய கிரிக்கெட்டிற்கு அறிமுகமான பல வீரர்கள் தற்போது இந்திய அணியில் முன்னணி வீரராக திகழ்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் விராட் கோலி, ரோகித் சர்மா, ஜடேஜா, அஸ்வின், தவான் போன்றவர்களைக் குறிப்பிடலாம். தோனி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் இன்றளவும் இந்திய அணியின் சிறந்த கேப்டனாக பார்க்கப்பட்டு வருகிறார்.
அதேபோன்று தோனியின் தலைமையில் இந்திய அணி விளையாடிக் கொண்டிருந்தபோது வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இல்லாதது அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது. அப்போதுதான் ஐபிஎல் தொடரில் கலக்கிக் கொண்டிருக்கும் ஹார்டிக் பாண்டியாவிற்கு சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை வழங்கினார்.