
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நான்காவது முறையாக கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த தோனி, இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு வெறும் 2 நாட்களுக்கு முன்பாக சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தார். சென்னை அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்பின் சென்னை அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டார்.
தோனிக்கு பிறகு சென்னை அணியை வழிநடத்த ஜடேஜாவே சரியானவர் என்றே எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் சென்னை அணியோ நடப்பு தொடரில் தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது. இதுவரை சென்னை அணி விளையாடியுள்ள 8 போட்டிகளில் வெறும் 2 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 6 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளதன் மூலம் கிட்டத்தட்ட ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் சென்னை அணி இழந்துவிட்டது.
சென்னை அணியின் தொடர் தோல்விகள் ஜடேஜாவின் கேப்டன்சி மீதான கேள்வியை எழுப்பியுள்ளதால், ஜடேஜா கேப்டன் பதவிக்கு சரியானவர் இல்லை அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்குவதே அவருக்கும், சென்னை அணிக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றே பல கிரிக்கெட் வல்லுநர்களும் கருத்து தெரிவித்து வருகின்றர். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு சென்னை அணியின் ரசிகர்கள் மனநிலையும் இதுவாகவே உள்ளது.