
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் முக்கியமான லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஆசிய கண்டத்தின் டாப் 2 அணிகளான இவ்விரு அணிகளில் விராட் கோலி, ரோஹித் சர்மா, பாபர் ஆசாம், ஷாஹீன் அஃப்ரிடி போன்ற தரமான வீரர்கள் இருப்பதால் அனல் பறக்கப் போகும் இப்போட்டியை பார்ப்பதற்கு அனைவரிடமும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
முன்னதாக இந்த போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் காயத்திலிருந்து குணமடைந்து விளையாடுவதால் நம்பர் 4வது பேட்ஸ்மேன் பிரச்சனை தீர்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஆனால் கேஎல் ராகுல் பயிற்சிகளின் போது மீண்டும் லேசான காயத்தை சந்தித்ததால் இந்த ஆசிய கோப்பையின் முதலிரண்டு போட்டியில் விளையாட மாட்டார் என்பது இந்தியாவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ஏனெனில் தொடக்க வீரராக விளையாடி தடுமாறிய அவர் ரிஷப் பந்த்திற்கு பதிலாக விக்கெட் கீப்பராக விளையாடும் வாய்ப்பை பெற்று கடந்த ஜனவரி, பிப்ரவரியில் இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடர்களில் மிடில் ஆர்டரில் நங்கூரமாக விளையாடி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார்.