கிரிக்கெட் உலகில் 90களில் ஜிம்பாப்வே மிகவும் ஒரு முக்கியமான அணியாக வலம் வந்தது. 99 உலகக்கோப்பையில் இந்திய அணியை ஜிம்பாப்வே வீழ்த்தியும் இருந்தது. இதுவெல்லாம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு என்றும் நினைவில் இருக்கக்கூடிய விஷயம். வீழ்ந்த அந்தப் போட்டியில் ஹென்றி ஓலங்காவை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
ஜிம்பாப்வே அணியை அன்று எடுத்துக் கொண்டால் ஆன்ட்டி ஃபிளவர், கிராண்ட் ஃபிளவர், நீல் ஜான்சன், ஹென்றி ஓலங்கா என இவர்களோடு சேர்த்து வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மற்றும் ஜிம்பாப்வே அணிக்கு கேப்டனாக இருந்த ஹீத் ஸ்ட்ரீக் பெயர் எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும். ஜிம்பாப்வே அணியின் வேகப்பந்து வீச்சு யூனிட்டுக்கு தலைமை தாங்கியவர் இவர்.
சிறந்த பந்துவீச்சாளரான இவர் அணிக்கு கடைசி கட்டங்களில் பேட்டிங்கும் செய்யக்கூடியவர். மேலும் சில காலம் ஜிம்பாப்வே அணியை வழிநடத்தவும் செய்திருக்கிறார். தற்பொழுது 47 வயதாகும் இவர் புற்றுநோயால் நீண்ட நாட்கள் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அதனால் இன்று அவர் இறந்துவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் பரவலாக செய்திகள் வெளிவந்தது.