ஆசிய கோப்பை 2022: இந்தியா, பாகிஸ்தானுடன் இணைந்த ஹாங்காங்!
ஆசிய கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் ஹாங்காங் அணி முதலிடத்தைப் பிடித்து இந்தியா, பாகிஸ்தான் அணிகள் உள்ள பட்டியளில் இணைந்துள்ளது.
ஆசிய கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கிறது. ஆறாவது அணியை தீர்மானிக்க ஆசிய கோப்பை தகுதி சுற்று நடைபெற்றது. இதில் யுஏஇ, குவைத், ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் ஆகிய 4 அணிகள் பங்கேற்றது.
இதில் ரவுண்ட் ராபின் முறைப்படி ஒவ்வொரு அணிகளும், மற்ற அணியுடன் ஒரு முறை மோதியது. இதில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் அணி 6ஆவது அணியாக பங்கேற்கும். இதில் போட்டியை நடத்தும் யுஏஇ அல்லது குவைத் அணிகள் தான் பிரதான சுற்றுக்கு தகுதி பெறும் என கணிக்கப்பட்டது.
Trending
ஆனால், யாருமே எதிர்பாராத வகையில் ஹாங்காங் அணி தகுதி பெற்றுள்ளது. ஹாங்காங் அணி விளையாடிய 3 போட்டியிலும் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. ஹாங்காங் அணி இதுவரை யுஏஇ அணியை டி20 கிரிக்கெட்டில் வீழ்த்தியதே இல்லை. ஆனால் நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த யுஏஇ அணி 20 ஓவர் முடிவில் 147 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய ஹாங்காங் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து 2ஆவது முறையாக ஆசிய கோப்பை தொடருக்கு ஹாங்காங் அணி தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணியுடன் 3ஆவது அணியாக ஹாங்காங் தகுதி பெற்றுள்ளது. ஏற்கனவே கடந்த ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவுக்கு ஹாங்காங் பயமுறுத்திய நிகழ்வும் நடைபெற்றுள்ளது.
ஹாங்காங் அணியில் யாசிம் முர்தசா, தகுதி சுற்றில் 3 போட்டியில் விளையாடி 130 ரன்களும், பாபர் ஹயாத் 3 போட்டியில் விளையாடி 97 ரன்களும் எடுத்துள்ளனர். பந்துவீச்சிலும் இஷான் கான் 3 போட்டியில் விளையாடி 9 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். ஏ பிரிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணியே சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். இதனால், இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்துவது ஹாங்காங்கிற்கு கடினமாக இருந்தாலும், சாத்தியங்கள் உள்ளன.
Win Big, Make Your Cricket Tales Now