அணியின் வெற்றிக்கு பங்களிப்பதில் மகிழ்ச்சி - சஞ்சு சாம்சன்!
மைதானத்தில் எவ்வளவு நேரம் நின்று பேட்டிங் செய்ய முடிகிறதோ அவ்வளவு நேரம் பேட்டிங் செய்ய ஆசைப்படுகிறேன் என இந்திய வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்த இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 38.1 ஓவர்களில் 161 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளையும், மற்ற ஐந்து பவுலர்களும் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றி அசத்தினர். பின்னர் 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியானது 25.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Trending
இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் 39 பந்துகளை சந்தித்து மூன்று பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் என 43 ரன்கள் குவித்து அசத்தினார்கள். இவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக அவருக்கு போட்டியின் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
ஐபிஎல் தொடர்களில் கடந்த பல ஆண்டுகளாகவே மிக சிறப்பாக விளையாடி வரும் சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருந்து வந்த வேளையில் சமீபமாகவே அவருக்கு அவ்வப்போது வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றது. அதேபோன்று தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை மிக சிறப்பாக பயன்படுத்தி வரும் சஞ்சு சாம்சன் இந்த போட்டியில் அருமையான பேட்டிங்கின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய சஞ்சு சாம்சன், “மைதானத்தில் எவ்வளவு நேரம் நின்று பேட்டிங் செய்ய முடிகிறதோ அவ்வளவு நேரம் பேட்டிங் செய்ய ஆசைப்படுகிறேன். அதை போன்று நாம் நின்று பேட்டிங் செய்யும்போது அது நல்ல உணர்வை தரும். மேலும் இந்திய அணிக்காக நான் எனது பங்களிப்பை அளிப்பது இன்னும் ஸ்பெஷலான ஒன்று.
இந்த போட்டியில் நான் மூன்று கேட்ச்களை பிடித்தேன். ஆனால் ஒரு ஸ்டம்பிங்கை தவறவிட்டது தவறுதான். என்னை பொறுத்தவரை கீப்பிங், பேட்டிங் என இரண்டுமே எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நமது பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி அவர்களை வீழ்த்தினர்” என தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now