
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை கடந்த ஜூன் மாத இறுதியில் மும்பையில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. அதன்படி வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் போட்டிகள் நடக்க உள்ளது. 10 மைதானங்களில் 45 லீக் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், இந்திய அணி 9 மைதானங்கள்லும் லீக் சுற்றுப் போட்டியில் விளையாட உள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியானது அக்டோபர் 15 ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், நவராத்திரி விழா மற்றும் பாதுகாப்பு காரணமாக போட்டியானது அக்டோபர் 14 ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டது. இந்த போட்டி மட்டுமின்றி, மற்ற 9 போட்டிகளின் தேதிகளும் மாற்றம் செய்யப்பட்டது.
அதுமட்டுமின்றி ஹைதராபாத் மைதானத்தில் அக்டோபர் 12 ஆம் தேதி நடக்க இருந்த பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டியானது அக்டோபர் 10 ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டது. அக்டோபர் 9 ஆம் தேதி ஹைதராபாத்தில் நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.