
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நேற்று புளோரிடா மைதானத்தில் நடைபெற்ற நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 9 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்த தொடரில் இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் குவித்தது.
பின்னர் 179 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது துவக்கத்திலிருந்தே அதிரடியான ஆட்டத்தை கையில் எடுத்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசி விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை கடந்தது. அதன் பின்னரும் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய துவக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்தனர்.
முதல் விக்கெட்டாக சுப்மன் கில் 77 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய பின்னர் இறுதிவரை களத்தில் நின்ற ஜெயிஸ்வால் 84 ரன்கள் குவித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இறுதியில் இந்திய அணி 17 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 179 ரன்கள் குவித்து ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்த ஜெயிஸ்வால் 51 பந்துகளை சந்தித்து 11 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 84 ரன்கள் குவித்து அசத்தினார்.