
சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 5ஆவது கோப்பையை வென்று வெற்றிகரமான அணி என்ற மும்பையின் ஆல் டைம் சாதனையை சமன் செய்தது. அந்த வெற்றியில் ஜடேஜா முதல் ஓய்வு பெற்ற ராயுடு வரை அனைவரும் முக்கிய பங்காற்றியதை போலவே இலங்கையைச் சேர்ந்த மதீஷா பதிரானா பந்து வீச்சு துறையில் முக்கிய பங்காற்றினார்.
முன்னாள் ஜாம்பவான் லசித் மலிங்காவின் ஸ்லிங்கா ஆக்சனை பின்பற்றி அண்டர்-19 உலகக்கோப்பை தொடரில் விளையாடி அனைவரது கவனத்தை ஈர்த்தார். அதன் காரணமாக ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் ஆரம்பத்தில் நெட் பவுலராக விளையாடும் வாய்ப்பை பெற்ற அவர் 2022 சீசனில் கடைசிக்கட்ட சில போட்டிகளில் வாய்ப்பு பெற்று அசத்தினார். அதன் காரணமாக இந்த வருடம் 12 போட்டிகளில் வாய்ப்பு பெற்று 19 விக்கெட்டுகளை 8.01 என்ற நல்ல எக்கனாமியில் எடுத்த அவர் பெரும்பாலும் டெத் ஓவர்களில் மலிங்காவை போலவே துல்லியமான யார்கர் பந்துகளை வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்தார்.
இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டை தவிர்த்து ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் மட்டும் விளையாடினால் உலகக்கோப்பை கொண்ட தொடர்களில் பதிரான மேஜிக் செய்வார் என்று தோனி பாராட்டியது இலங்கை ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. அதனால் இலங்கைக்கு வருங்காலத்திற்கு தேவையான வைரத்தை தோனி பட்டை தீட்டி வருவதாக பிரபல தொகுப்பாளர் ஹர்ஷா போக்லே பாராட்டினார். இந்நிலையில் பெரிய அளவில் அனுபவமில்லாத குழந்தையை போல் இருந்த தமக்கு ஐபிஎல் போன்ற அழுத்தமான டி20 கிரிக்கெட்டில் எப்படி விளையாட வேண்டும் என்பதை தோனி கற்றுக் கொடுத்ததாக பதிரானா வெளிப்படையாக பேசியுள்ளார்.