
கடந்த 2015 மற்றும் 2019 என்று அடுத்தடுத்து உலகக்கோப்பைத் தொடர்களில் இறுதிப்போட்டி வரை சென்று நியூசிலாந்து அணி தோல்வியடைந்தது. அதிலும் 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரை பவுண்டரி கணக்கில் இங்கிலாந்து அணி வென்றதை, நியூசிலாந்து அணி ரசிகர்களால் கடைசி வரை ஜீரணிக்க முடியவில்லை.
அப்போதும் சிரித்து கொண்டிருந்த அந்த அணியின் கேப்டன் வில்லியம்சனின் முகம் இன்றும் ரசிகர்களின் நினைவுகளில் உள்ளது. இதனால் இந்தியாவில் நடக்கவுள்ள உலகக்கோப்பைத் தொடருக்காக நியூசிலாந்து அணி தீவிரமாக தயாராகி வருகிறது. ஏற்கனவே காயத்தில் இருந்து குணமடைந்து வில்லியம்சன் சக வீரர்களுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
அதேபோல் நியூசிலாந்து கிரிக்கெட் ஒப்பந்தமே வேண்டுமென்று போன ட்ரென்ட் போல்ட் 9 மாதங்களுக்கு பின் மீண்டும் தேசிய அணிக்கு திரும்பியுள்ளார். இதனால் இம்முறை உலகக்கோப்பையை மிஸ் செய்யக் கூடாது என்று நியூசிலாந்து அணியினர் முனைப்புடன் உள்ளனர். இந்த நிலையில் இந்திய ஆடுகளங்களை பற்றி நன்கு உணர்ந்த முன்னாள் வீரர்களை நியூசிலாந்து அணி பயிற்சியாளர்களாக ஒப்பந்தம் செய்துள்ளது.