இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில் டி20 வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் தொடக்க வீரரான ஷுப்மன் கில் 43 இடங்கள் முன்னேறி 25ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கில் 102 ரன்களைச் சேர்த்ததன் மூலம் அவர் முன்னேற்றம் கண்டுள்ளார்.
இதற்கு முன்பு அவர், அதிகபட்சமாக 30ஆவது இடம் வரை முன்னேறியிருந்தார். மற்றொரு தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 88ஆவது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் சூர்யகுமார் யாதவ் தொடர்கிறார். 2ஆவது இடத்தில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானும், 3ஆவது இடத்தில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாமும் உள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் வீரர்களில் பிரண்டன் கிங் 5 இடங்கள் முன்னேறி 13ஆவது இடத்தையும், கைல் மேயர்ஸ் 2 இடங்கள் முன்னேறி 45ஆவது இடத்தையும், ஷிம்ரான் ஹெட்மையர் 16 இடங்கள் முன்னேறி 85ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.