
நியூசிலாந்தில் நடைபெற்று வரும் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேனான ஆட்டம் மழையால் ரத்தானது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றாலும் இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
வெலிங்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் மழை காரணமாக இரு அணிகளுக்கு இடையிலான முக்கியமான ஆட்டம் 26 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்கா அணி 10.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 61 ரன்களை எடுத்திருந்த நிலையில் மீண்டும் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் ரத்தானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டன.
இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணி 9 புள்ளிகளுடன் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி 7 ஆட்டங்களில் 7 புள்ளிகளைக் கொண்டுள்ளது. இதர அணிகளின் வெற்றி, தோல்வியின் அடிப்படையில் அந்த அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும். இங்கிலாந்தும் இந்திய அணியும் தங்களது கடைசி ஆட்டங்களில் தோல்வியடைந்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்று விடும்.