PAK vs AUS, 2nd Test: இலக்கை எட்டுவதில் உறுதியாக இருக்கிறோம் - பாபர் ஆசாம்!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் 506 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிவரும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் சதமடித்து களத்தில் உள்ள நிலையில், கடைசி நாள் ஆட்டத்தில் இலக்கை எட்டுவதில் உறுதியாக உள்ளார்.
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டி கராச்சியில் நடந்துவருகிறது.
இப்போட்டியில் 506 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை பாகிஸ்தானுக்கு இலக்காக நிர்ணயித்தது. கடைசி இன்னிங்ஸில் இவ்வளவு பெரிய இலக்கை அடிப்பது மிக மிகக்கடினம். அதுவும் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 148 ரன்களுக்கு சுருண்டதையடுத்து, அந்த அணி இந்த இலக்கை நினைத்துக்கூட பார்க்க முடியாது என்ற எண்ணத்தில், 3ஆம் நாள் ஆட்டத்தின் கடைசி செசன் முடிவதற்கு முன்பாக பாகிஸ்தானிடம் பேட்டிங்கை கொடுத்தது ஆஸ்திரேலிய அணி. முழுமையாக 2 நாட்கள் எஞ்சியிருப்பதால், எளிதாக பாகிஸ்தானை ஆல் அவுட் செய்துவிடலாம் என ஆஸ்திரேலிய அணி நினைத்தது.
Trending
ஆனால் ஆஸ்திரேலிய அணியின் எண்ணத்தை தகர்த்தனர் பாகிஸ்தான் வீரர்கள் பாபர் அசாமும், அப்துல்லா ஷாஃபிக்கும். 3ஆம் நாள் ஆட்டம் முடியும் முன்பே ஒரு விக்கெட்டை பாகிஸ்தான் இழந்துவிட்டது. இமாம் உல் ஹக் ஆட்டமிழந்துவிட்டார். 4ஆம் நாளான இன்றைய ஆட்டத்தில் அசார் அலியும் 6 ரன்னில் ஆட்டமிழந்தார்.
21 ரன்களுக்கே பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஆனால் அதன்பின்னர் தொடக்க வீரர் அப்துல்லா ஷாஃபிக்கும், கேப்டன் பாபர் அசாமும் இணைந்து அபாரமாக ஆடினர். இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து விக்கெட்டையும் விட்டுக்கொடுக்காமல், அதேவேளையில் ஸ்கோரும் செய்தனர். மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் ஆகியோரையும் வேகத்தையும், நேதன் லயன் மற்றும் ஸ்வெப்சன் ஆகியோரின் சுழற்பந்துவீச்சையும் அபாரமாக எதிர்கொண்டு ஆடினர்.
மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடிய பாபர் அசாம் சதமடித்தார். அரைசதம் அடித்த அப்துல்லா ஷாஃபிக்கும் சதத்தை நோக்கி ஆடிவருகிறார். 4ஆம் நாள் ஆட்டம் முழுவதுமாக இருவரும் ஆடி முடித்தனர். 4ஆம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் அடித்துள்ளது. பாபர் அசாம் 102 ரன்களுடனும், ஷாஃபிக் 67 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டத்திற்கு பின் பேசிய சதமடித்த பாபர் அசாம், “முதல் இன்னிங்ஸுக்கு பின், ஆஸ்திரேலிய பவுலர்களின் ரிவர்ஸ் ஸ்விங்கை எப்படி எதிர்கொள்வது என்று வலையில் தீவிர பயிற்சி செய்தோம். ரிவர்ஸ் ஸ்விங்கை கொஞ்சம் தாமதமாக ஆட வேண்டும். இந்த சதம் எனக்கு மிக முக்கியமான சதம். என் அணிக்கு தேவைப்பட்டபோது அடிக்கப்பட்ட சதம். ஷாஃபிக்குடன் நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்திருக்கிறது. இன்னும் ஆட்டம் முடியவில்லை. நாளை கடைசி நாள் ஆட்டத்திலும் இதே மாதிரி ஆடவேண்டும். மற்ற வீரர்களும் முன்வந்து சிறப்பாக ஆடியாக வேண்டும்” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now