நான் கேப்டனாக இருக்கும் அணியில் நிச்சயம் இந்த வீரருக்கு எப்போதும் இடம் உண்டு - முரளிதரன்!
நான் கேப்டனாக செயல்படும் அணியில் நிச்சயம் இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவிற்கு எப்போது இடமுண்டு என இலங்கை முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு ஆல்ரவுண்டர்கள் அணியில் வருவதும் போவதுமாக இருக்கின்றனர். ஆனால் முழு நேர ஆல்-ரவுண்டராக இந்திய அணிக்கு சிறப்பாக விளையாடியவர்கள் சிலரே. அதிலும் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களை எடுத்துக் கொண்டால் முன்னாள் கேப்டன் கபில்தேவ்க்கு பிறகு சிறப்பான வீரர் இன்றி இந்திய அணி தவித்துக்கொண்டிருந்தது.
அந்நேரத்தில் தோனியின் தலைமையின் கீழ் கண்டெடுக்கப்பட்ட வீரர்தான் ஹர்திக் பாண்டியா. ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக அறிமுகமாகி இருந்தாலும் அதன் பிறகு இந்திய அணியில் இடம் பிடித்த ஹார்டிக் பாண்டியா பேட்டிங், பவுலிங், பீல்டிங் என மூன்றிலும் தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆரம்ப காலகட்டத்திலேயே தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் தனது இடத்தை உறுதிப்படுத்திய ஹர்திக் பாண்டியா மூன்று வகையான கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக தொடர்ச்சியாக இடம் பிடித்து விளையாடி வந்தார்.
Trending
இந்நிலையில் அவரது கிரிக்கெட் கேரியருக்கு திருப்புமுனையாக 2018 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடர் அமைந்தது. ஏனெனில் அந்த தொடரின் போது முதுகு பகுதியில் காயம் அடைந்த அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஒரு ஆண்டுக்கு பிறகு கிரிக்கெட் களத்திற்கு திரும்பினார். அதன் பின்னர் தற்போது வரை அவரால் முழுநேர வேகப்பந்து வீச்சில் ஈடுபடமுடியவில்லை.
காயத்திற்கு முன்னர் சராசரியாக 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி வந்த அவர் தற்போது 130 கிலோ மீட்டர் வேகத்திற்கு வேகத்தை குறைத்துள்ளார். அதுமட்டுமின்றி அவரால் முழுவதுமாக ஓவர்களை வீச முடியவில்லை. இருந்தாலும் அவருடைய ஆட்டத்திறன் காரணமாக தொடர்ந்து அவர் இந்திய அணியில் இடம்பிடித்து வருகிறார்.
அவர பழையபடி பன்ந்துவீச்சில் சிறப்பாக இல்லை என்றாலும் பேட்டிங்கில் அசத்தலான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது இலங்கை சென்றுள்ள இந்திய அணியிலும் இடம் பிடித்த அவர் இந்த தொடரில் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும் டி20 உலக கோப்பை தொடரில் நிச்சயம் சிறப்பாக செயல்படுவார் என்று நம்பப்படுகிறது.
இந்நிலையில் பாண்டியா குறித்து பேசிய இலங்கை அணியின் முன்னாள் வீரர் முரளிதரன், “பாண்டியா ஒரு சிறப்பு மிக்க வீரர். நிச்சயம் உலகின் எந்த ஒரு அணியில் நான் கேப்டனாக இருந்தாலும் அவரை அணியில் எடுப்பேன். 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீச கூடிய அவர் நல்ல முறையில் பேட்டிங் செய்யும் திறனுடையவர்.
அதேபோன்று 20 முதல் 30 பந்துகளில் அவர் பேட்டிங் செய்து விட்டால் அரைசதம் அடித்து விடுவார். 70 பந்துகள் எல்லாம் பேட்டிங் ஆடினால் அவரது ரன் குவிப்பு வேறு எங்கோ இருக்கும்” என அவரை புகழந்து கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now