ஐஎல்டி20 2024: துபாய் கேப்பிட்டல்ஸை 147 ரன்களில் சுருட்டியது மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ்!
மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 148 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஐஎல்டி20 என்றழைக்கப்படும் இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரின் இரண்டாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று நடைபெற்று வரும் 29ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் - துபாய் கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய துபாய் கேப்பிட்டல்ஸ் அணிக்கு டாம் பாண்டன் - மேக்ஸ் ஹோல்டன் இணை தொடக்கம் கொடுத்தனர். தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் பவுண்டரிகளாக விளாசி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மேக்ஸ் ஹோல்டன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
Trending
பின் 51 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மேக்ஸ் ஹோல்டன் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டாம் பாண்டனும் 37 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய லூயிஸ் டு ப்ளூய் 17 ரன்களுக்கும், கேப்டன் சாம் பில்லிங்ஸ் 6 ரன்களுக்கும், கடந்த போட்டியில் அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த சிக்கந்தர் ரஸா ரன்கள் ஏதுமின்றியும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அதனைத்தொடர்ந்து களமிறங்கிய பென் டங்க், தசுன் ஷனகா, ஸ்காட் குகெலீஜ்ன், ஒல்லி ஸ்டோன் ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, 20 ஓவர்கள் முடிவில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை மட்டுமே எடுத்தது. எமிரேட்ஸ் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய விஜயகாந்த் வியாஸ்காந்த், டேன் மௌஸ்லி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இப்போட்டியில் துபாய் கேப்பிட்டல்ஸ் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now