
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐஎல்டி20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற 19ஆவது லீக் போட்டியில் எம்ஐ எமிரேட்ஸ் மற்றும் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதைனையடுத்து களமிறங்கிய கேப்டவுன் அணியிக்கு குசால் பெரேரா - முகமது வசீம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் குசால் பெரேரா 4 ரன்னிலும், முகமது வசீம் 12 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். அடுத்து களமிறங்கிய டாம் பான்டன் ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் மறுமுனையில் விளையாடிய கேப்டன் நிக்கோலஸ் பூரன் 8 ரன்களுக்கும், டேன் மௌஸ்லி 5 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் அந்த அணி 57 ரன்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின் பன்டனுடன் இணைந்த கீரென் பொல்லார்ட் பொறுப்புடன் விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் பான்டன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் 56 ரன்கைளில் பான்டனும், கீரன் பொல்லார்ட் 34 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, இறுதியில் அகீல் ஹொசைன் 20 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் எம்ஐ எமிரேட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களைச் சேர்த்தது. ஜெயண்ட்ஸ் அணி தரப்பில் டேனியல் வோரல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.