
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரானது நேற்று முன்தினம் மிகச் சிறப்பாக நிறைவடைந்தது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து குஜராத் அணியின் சிறப்பான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 130 ரன்களை மட்டுமே அடித்தது.
அதனைத் தொடர்ந்து 131 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணியானது சுப்மன் கில், பாண்டியா மற்றும் மில்லர் ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக 18.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 133 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த இறுதிப் போட்டியில் பந்து வீச்சில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய பாண்டியா, பேட்டிங்கிலும் 34 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.