
இந்திய அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக வலம் வந்த ஹர்பஜன் சிங், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.
டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியிருந்த போதும், இந்திய அணி தனக்கு சரியான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என ஹர்பஜன் சிங் தெரிவித்திருந்தது அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பியிருந்தது.
அதே போல, எம் எஸ் தோனியைப் போன்று, தனக்கும் இந்திய அணியில் அதிக வாய்ப்பு கிடைத்திருந்தால், டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி, சாதனை படைத்திருப்பேன் என்றும் ஹர்பஜன் சிங் குறிப்பிட்டிருந்தார். இதனால், தோனி மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோருக்கு இடையே மோதல் இருப்பதாகவும் பல்வேறு தகவல்கள் வலம் வரத் தொடங்கின. இந்நிலையில், இது பற்றிய விளக்கத்தை, ஹர்பஜன் சிங் தற்போது தெரிவித்துள்ளார்.