
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. வெலிங்டனில் நடக்க இருந்த தொடக்க ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
மவுன்ட் மாங்கானுயிவில் நடந்த இரண்டாவது ஆட்டத்தில் 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை பந்தாடிய இந்தியா தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நேப்பியரில் இன்று நடக்கிறது. இந்த ஆண்டில் இந்தியா விளையாடும் கடைசி சர்வதேச 20 ஓவர் போட்டி இது தான்.
முந்தைய ஆட்டத்தில் சூர்யகுமாரின் அதிரடியான சதமும் (111 ரன்), தீபக் ஹூடா, யுஸ்வேந்திர சாஹலின் சுழற்பந்து வீச்சும் இந்தியாவின் வெற்றியை எளிதாக்கின. நியூசிலாந்து பவுலர் டிம் சவுதி 'ஹாட்ரிக்' விக்கெட் வீழ்த்தியும் பலன் இல்லை. அதே உத்வேகத்துடன் களம் இறங்கும் இந்தியா இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை வசப்படுத்தும் முனைப்புடன் உள்ளது.