
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. செஞ்சுரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் ஜொஹன்னஸ்பர்க்கில் திங்கள் அன்று தொடங்கியது.
இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. காயம் காரணமாக இந்த டெஸ்டிலிருந்து விராட் கோலி விலகியுள்ளார். இதனால் கே.எல். ராகுல் கேப்டனாகக் களம் இறங்கினார். டாஸ் வென்ற ராகுல், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் கோலிக்குப் பதிலாக ஹனுமா விஹாரி தேர்வானார். தெ.ஆ. அணியில் ஓய்வு பெற்ற டி காக்குக்குப் பதிலாக கைல் வெரீனும் முல்டருக்குப் பதிலாக ஆலிவியரும் தேர்வானார்கள்.
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 202 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ராகுல் 50, அஸ்வின் 46 ரன்கள் எடுத்தார்கள். தெ.ஆ. தரப்பில் ஜேன்சன் 4 விக்கெட்டுகளும் ரபாடா, ஆலிவியர் தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள். முதல் நாள் முடிவில் தெ.ஆ. அணி 18 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்தது. எல்கர் 11, பீட்டர்சன் 14 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.