
பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடப்பாண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற்றுவருகிறது. இதில் குரூப் ஏ அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்தியா மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய நேபாள் அணிக்கு குஷால் புர்டெல் - ஆசிப் ஷேக் இணை யாரும் எதிர்பாரத தொடக்கத்தைக் கொடுத்தனர். அதிலும் இந்திய அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோரது பந்துவீச்சை துவம்சம் செய்து விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் அமைத்தனர்.
அதன்பின் அதிரடியாக விளையாடிவந்த குஷால் புர்டெல் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 38 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய பிம் ஷார்க்கி, கேப்டன் ரோஹித் பௌடல், குசால் மல்லா ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் மறுபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆசிஃப் ஷேக் தனது 10 ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.