IND vs PAK, Asia Cup 2023: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இம்முறை போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறுகின்றன. செப்டம்பர் 17ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் கலந்து கொண்டுள்ள 6 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன.
முதல் சுற்றிலிருந்து இருந்து இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. இதில் நாளை நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டி மழை காரணமாக இடையூறுகளை சந்தித்தால் ‘ரிசர்வ டே’-வான திங்கட்கிழமை அன்று போட்டி நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
Trending
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இந்தியா vs பாகிஸ்தான்
- இடம் - ஆர்.பிரேமதாச மைதானம், கொழும்பு
- நேரம் - மாலை 3 மணி
போட்டி முன்னோட்டம்
குரூப் சுற்றில் இரு அணிகளும் மோதிய போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. அதேபோல நாளைய போட்டியிலும் மழை பெய்யவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, வேறு எந்த போட்டிக்கு இல்லாத ரிசர்வ் டே, நாளை நடைபெறும் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மழை ஒருபுறம் அச்சத்தை ஏற்படுத்தினாலும், இந்திய அணிக்கு அச்சுறுத்தல் என்றால் அது பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சு கூட்டணி தான். ஷாஹீன் ஷா அஃப்ரிடி, ஹரிஸ் ராவுஃப், நசீம் ஷா ஆகியோர் இந்திய அணிக்கு மட்டுமின்றி அனைத்து அணிகளுக்குமே அச்சத்தை தரக்கூடியவர்கள் தான். இதில், குறிப்பாக, ஷஹின் அஃப்ரிடி தான் இந்திய அணியின் ஓப்பனிங் பேட்டர்களுக்கு பெரும் தலைவலியை கொடுக்கக் கூடியவராக உள்ளார்.
சமீப காலங்களில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷுப்மன் கில், கேஎல் ராகுல் போன்ற வலது கை பேட்டர்கள் அஃப்ரிடி பந்துவீச்சுக்கு திணறி வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. மேலும், இந்திய டாப்-ஆர்டரில் இடது கை பேட்டர்கள் இல்லாதது இந்தியாவுக்கு பின்னடைவாக உள்ளது. இடது கை பேட்டர்கள் இல்லாததால் இந்திய அணியால் அஃப்ரிடியின் தாக்குதலுக்கு எதிர் தாக்குதல் தொடுக்க முடியவில்லை எனலாம். இதனாலேயே இஷான் கிஷனை ஓப்பனிங்கில் இறக்க வேண்டும் எனவும் சிலர் கருத்து கூறியும் வருகின்றனர்.
அப்ரிடியின் தொடக்க ஓவர்களை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் ரோஹித் - கில் உள்ளனர். கடந்த போட்டியில் குட்-லென்த்தில் போட்ட பந்துகளில் தான் விராட்டும், ரோஹித்தும் விக்கெட்டை பறிகொடுத்தனர். எனவே, இன்-ஸ்வீங்கை கணித்து பேட் மற்றும் பேடை நெருக்கமாக வைத்துக்கொள்ளும் டெக்னிக் தான் சரியானது என வல்லுநர்கள் தொடர்ந்து பாடம் எடுத்து வருகின்றனர்.
இந்திய அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ஜஸ்ப்ரித் பும்ரா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளது பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. அவருடன் முகமது சிராஜ், முகமது ஷமி ஆகியோரும் இருப்பது எதிரணி பேட்டர்களை ரன்கள் சேர்க்கவிடாமல் தடுக்க உதவும் என எதிர்பார்க்கப்டுகிறது. அவர்களுடன் சுழற்பந்து வீச்சாளர்களான ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் கூட்டாணி நிச்சயம் எதிரணி பேட்டர்களை சோதிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அதேசமயம் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி நடப்பு ஆசிய கோப்பை தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணியௌ ஸ்தம்பிக்கவைத்து வருகிறது. அணியின் பேட்டிங்கில் ஃபகர் ஸமான், இமாம் உல் ஹக், பாபர் அசாம், முகமது ரிஸ்வான், இஃப்திகார் அகமது, ஆகா சல்மான் ஆகியோரும் இருப்பது பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.
மேலும் பாகிஸ்தான் அணியின் பல்மே வேகப்பந்துவீச்சு கூட்டணி தான். ஷாஹீன் அஃப்ரிடி, ஹரிஸ் ராவுஃப், நசீம் ஷா ஆகியோர் எதிரணி பேட்டர்களுக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்து வருகின்றனர். அவர்களுடன் ஷதாப் கான், முகமது நவாஸ், அப்துல் ஷஃபிக், உஸாமா மிர் ஆகியோரும் இருப்பது நிச்சயம் இந்திய அணிக்கு தலைவலியை கொடுக்கும் விஷயமாக உள்ளது. இவர்களின் தாக்குதலை இந்திய அணி எப்படி எதிர்கொள்ளபோகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மைதானம் எப்படி
இந்தப் போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல உதவி கிடைக்கும், அதே சமயம் பேட்ஸ்மேன்கள் களத்தில் நேரத்தை செலவிட்ட பிறகு பெரிய ரன்களை எடுக்க முடியும். வேகப்பந்து வீச்சாளர்கள் ஆரம்ப ஓவர்களிலேயே எதிரணி அணிக்கு அதிர்ச்சி கொடுக்கலாம். டாஸ் வென்ற அணி முதலில் பேட்டிங் செய்யவே விரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 133
- இந்தியா - 55
- பாகிஸ்தான் - 73
- முடிவில்லை - 05
உத்தேச லெவன்
இந்தியா: ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா.
பாகிஸ்தான் பிளேயிங் லெவன்: ஃபகார் ஸமான், இமாம்- உல்- ஹக், பாபர் ஆசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், ஆகா சல்மான், இஃப்திகார் அகமது, ஷதாப் கான், ஃபஹீம் அஷ்ரஃப், ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப்.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர் - முகமது ரிஸ்வான்
- பேட்ஸ்மேன்கள்- விராட் கோலி (துணை கேப்டன்), பாபர் அசாம், ரோஹித் சர்மா, இமாம் உல் ஹக்
- ஆல்ரவுண்டர் - ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா
- பந்துவீச்சாளர்கள்- ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், ஷஹீன் ஷா அஃப்ரிடி, ஹரிஸ் ராவுஃப்.
Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.
Win Big, Make Your Cricket Tales Now