
ஐசிசி 2023 உலக கோப்பைக்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த அணிகள் தயாராகும் வகையில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்றுவரும் போட்டியில் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் பாகிஸ்தான் அணியை எதிர்த்து ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது. பல்லகலேவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ஷுப்மன் கில் - ரோஹித் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரோஹித் சர்மா இரண்டு பவுண்டரிகளை அடித்து செட்டில் ஆன நிலையில் மழைக்குறுக்கிட்டது. அதன்பின் தொடங்கிய ஆட்டத்தில் 11 ரன்கள் எடுத்திருந்த ரோஹித் சர்மா, ஷாஹின் அஃப்ரிடி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர வீரர் விராட் கோலி 4 ரன்களை எடுத்த நிலையில் ஷாஹின் அஃப்ரிடி பந்துவீச்சில் இன்சைட் எட்ஜ் ஆகி போல்டாகினார்.
அதன்பின் காயத்திலிருந்து மீண்டு அணியில் இடம்பிடித்த ஸ்ரேயாஸ் ஐயரும் வழக்கம் போல் ஹாரிஸ் ராவுஃப் வீசிய பவுன்சர் பந்தில் தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் தட்டுத்தடுமாறி களத்தில் இருந்த ஷுப்மன் கில்லும் 32 பந்துகளில் 10 ரன்களை மட்டுமே எடுத்து ஹாரிஸ் ராவுஃப் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார். இதனால் இந்திய அணி 66 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.