
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி முதல் முறையாக இந்திய மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்று சாதனை படைத்தது.
இந்நிலையில், இன்று இந்தூரில் நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டன. கேஎல் ராகுல், விராட் கோலி, அர்ஷ்தீப் சிங் ஆகிய மூவருக்கும் ஓய்வளிக்கப்பட்டு ஸ்ரேயாஸ் ஐயர், உமேஷ் யாதவ், முகமது சிராஜ் ஆகிய மூவரும் சேர்க்கப்பட்டனர்.
முதலில் பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான டெம்பா பவுமா மீண்டும் சொதப்பினார். வெறும் 3 ரன்னில் ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார். இந்தூர் மைதானம் மிகச்சிறியது. அதைப்பயன்படுத்தி டி காக் மற்றும் ரூஸோவ் ஆகிய இருவரும் அடித்து ஆடினர். இந்திய பவுலிங்கை பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி அடித்து நொறுக்கினார்.