
இந்தியா - இலங்கை இடையே பெங்களூருவில் நடந்துவரும் பகலிரவு (2வது) டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 252 ரன்கள் அடித்தது. இந்திய அணியில் அபாரமாக பேட்டிங் ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர் 92 ரன்களை குவித்தார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி, பும்ராவின் பவுலிங்கில் சரணடைந்தது. அனைத்து வீரர்களுமே சொற்ப ரன்களில் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக ஆட்டமிழக்க, 109 ரன்களுக்கே சுருண்டது இலங்கை அணி. இந்திய அணி சார்பில் பும்ரா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
143 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியில் மீண்டும் ஷ்ரேயாஸ் ஐயர் அபாரமாக பேட்டிங் ஆடினார். அதிரடியாக ஆடி 28 பந்தில் அரைசதம் அடித்த ரிஷப் பண்ட் 50 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பாக பேட்டிங் ஆடி 2வது இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்த ஷ்ரேயாஸ் ஐயர் 67 ரன்களில் ஆட்டமிழந்தார். 303 ரன்களுக்கு 2வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்ததையடுத்து, 447 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை இலங்கை அணி விரட்டுகிறது.