நாங்கள் அனைத்து துறையிலும் சிறப்பாக இல்லை - தசுன் ஷனகா
பௌலிங், பீல்டிங், பேட்டிங் என அனைத்து துறைகளிலும் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை என இலங்கை கேப்டன் தசுன் ஷனகா தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் படுதோல்வியைச் சந்தித்தது.
இப்போட்டி முடிந்தப் பிறகு பேசிய இலங்கை அணிக் கேப்டன் தசுன் ஷனகா, “பௌலிங், பீல்டிங், பேட்டிங் என அனைத்து துறைகளிலும் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. இந்திய பேட்ஸ்மேன்கள் காலநிலைகளை அறிந்து சிறப்பாக பேட்டிங் செய்தனர். நான் அதிக ஓவர்களை வீசியிருக்க வேண்டும்.
அதுமட்டுமல்ல எங்கள் அணியில் வனிந்து ஹசரங்கா, தீக்ஷனா ஆகிய இரண்டு வலிமையான ஸ்பின்னர்கள் இல்லை. இவர்களுக்கான மாற்று வீரர்கள், அனுபவமிக்கவர்களாக இல்லை.அசலங்கா இப்போட்டியில் சிறப்பாக விளையாடினார். சமீராவும்தான்” எனக் கூறினார்.
இலங்கை சுழற்பந்துவீச்சாளர்களான ஹசரங்கா, தீக்ஷனா ஆகியோருக்கு கரோனா ஏற்பட்டுள்ளதால், இந்திய தொடருக்கு முன்பே தனிமைப்படுத்துதல் முகாமுக்கு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now