
வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா பங்கேற்கிறது. இத்தொடரின் முதல் போட்டி ஜூலை 22ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு போர்ட் ஆப் ஸ்பெய்ன் நகரில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ஷிகர் தவான் – சுப்மன் கில் ஆகியோர் ஆரம்பம் முதலே நிதான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். இதில் ஒருபுறம் ஷிகர் தவான் மெதுவாக பேட்டிங் செய்ய, மறுபுறம் கில் அதிரடியாக ரன்களை குவித்தார்.
பவர்பிளே ஓவர்கள் முடிந்தும் அட்டகாசமாக பேட்டிங் செய்த இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அற்புதமான தொடக்கம் கொடுத்தபோது 6 பவுண்டரி 2 சிக்சருடன் 64 (53) ரன்களில் சுப்மன் கில் ரன் அவுட்டானார். இதையடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் தனது பங்கிற்கு சிறப்பாக பேட்டிங் செய்து கேப்டன் தவானுடன் 2ஆவது விக்கெட்டுக்கு 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை மேலும் வலுப்படுத்தினார்.