
நியூசிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, ஷர்துல் தாகூர், ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருப்பதால், ஸ்ரேயாஸ் ஐயர், கேஎஸ் பரத், பிரசித் கிருஷ்ணா ஆகிய வீரர்களுக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைத்துள்ளது.
இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடிராத ஸ்ரேயாஸ் ஐயருக்கு இது அருமையான வாய்ப்பு. ஆனால் 2018 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அறிமுகமாகி, அறிமுக தொடரிலேயே சவாலான இங்கிலாந்து கண்டிஷனில் அருமையாக பேட்டிங் ஆடி, பின்னர் 2 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணங்களிலும் நன்றாக விளையாடி, கடந்த 3 ஆண்டுகளாக இந்திய டெஸ்ட் அணியின் முக்கியமான வீரராக திகழ்ந்து வந்த ஹனுமா விஹாரிக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காதது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
கடந்த 2020-2021 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் சிட்னி டெஸ்ட்டில் இந்திய அணி மிகவும் இக்கட்டான நிலையில் இருந்தபோது, காயத்துடன் களமிறங்கி 162 பந்துகள் பேட்டிங் ஆடி அந்த போட்டியை இந்திய அணி டிரா செய்ய உதவினார். சிட்னி டெஸ்ட் டிரா ஆனதால்தான் இந்திய அணியால் அந்த டெஸ்ட் தொடரை ஜெயிக்க முடிந்தது. இந்திய அணி 2ஆவது முறையாக ஆஸி., மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல முக்கிய காரணமாக விஹாரியும் திகழ்ந்தார்.