
டி20 உலக கோப்பையில் இந்திய அணி சிறப்பாக ஆடி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது. அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது இந்திய அணி. இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் தென் ஆப்பிரிக்காவிடம் மட்டுமே தோற்றது. பாகிஸ்தான், நெதர்லாந்து, வங்கதேசம், ஜிம்பாப்வே ஆகிய 4 அணிகளையும் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்திய அணி இந்த உலக கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை பெற பேட்டிங்கில் விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவின் பங்களிப்புதான் முக்கிய காரணம்.
கடைசி 2 போட்டிகளில் ராகுல் நன்றாக விளையாடினார். ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் சரியாக பேட்டிங் ஆடவில்லை. விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் தான் இந்தியாவிற்காக இந்த உலக கோப்பையில் சிறப்பாக பேட்டிங் விளையாடி வருகின்றனர். அவர்களைத்தான் இந்திய அணி பேட்டிங்கில் அதிகம் நம்பியும் சார்ந்தும் இருக்கிறது.
குறிப்பாக சூர்யகுமார் யாதவின் அதிரடியான பேட்டிங்கால் தான் இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்கிறது. வித்தியாசமான ஷாட்டுகளை ஆடவல்லவர் சூர்யகுமார் யாதவ். பொதுவாக பவுலர்கள் டெத் ஓவர்களில் வீசுவதற்கென்றே சில பந்துகள் வைத்திருக்கின்றனர். ஸ்லோ யார்க்கர், ஸ்லோ அவுட் சைட் ஆஃப் யார்க்கர், ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே பந்தை வீசுவது ஆகியவைதான் டெத் ஓவர்களில் வீசுவதற்கு பவுலர்கள் வைத்திருக்கும் ஆப்சன்கள். இந்த மாதிரியான பந்துகளை ஆடுவதற்கு பெரும்பாலான சிறந்த பேட்ஸ்மேன்களிடம் ஷாட் இல்லை. ஆனால் சூர்யகுமார் யாதவிடம் இதுமாதிரியான பந்துகளை சிக்ஸர்கள் அடிப்பதற்குக்கூட ஷாட்டுகள் உள்ளன.