புவனேஷ்வர் குமாரின் தந்தை புற்று நோயால் உயிரிழப்பு; ரசிகர்கள் இரங்கல்!
இங்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரின் தந்தை புற்று நோயால் இன்று உயிரிழந்தார்.
இங்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார். இவர் சமீபத்தில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வந்தார். தொடர் பாதியில் நிறுத்தப்பட்டதால் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் தான் வீட்டிற்கு திரும்பினார்.
புவனேஷ்வர் குமாரின் தந்தை கிரண் பால் உத்தரபிரேதசத்தில் ஓய்வு பெற்ற காவல் அலுவலர். 63 வயதாகும் அவர் கடந்த சில வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நொய்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. பின்னர் ஓரளவு குணமடைந்ததால் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு திரும்பினார்.
Trending
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக மீண்டும் அவரின் உடல் நிலை மோசமடைந்துள்ளது. இதன் காரணமாக அவர் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.
அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும், இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் புவனேஷ்வர் குமாருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதன் காரணமாக அவர் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வந்தார். இதனால் தந்தையின் கடைசி நிமிடத்தில் அவருடன் இருக்கும் வாய்ப்பு புவனேஷ்வர் குமாருக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது. புவனேஷ்வர் குமாருக்கு கிரிக்கெட் உலகை சேர்ந்த பலரும் தங்களது ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர்.
Win Big, Make Your Cricket Tales Now